செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்

Published On 2020-05-30 07:43 GMT   |   Update On 2020-05-30 07:43 GMT
ரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம் என்று அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை மாடக்குளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மூளிகை பொடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க. வினரும் நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் பசி இல்லாத தமிழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மக்கள் மீது அக்கறை கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழகம் முழுவதும் 98 ஆயிரம் மனுக்கள் அவரிடம் வந்ததாக பொய்யான தகவலை கூறுகிறார். தமிழ் நாட்டில் 32,965 ரேசன் கடைகள் மூலம் 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களும், நிவாரணத் தொகை ரூ.1000-ம் வழங்கப்பட்டு உள்ளது.

மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு முதல்- அமைச்சர் ஆலோசனை வழங்கினாலும் மு.க. ஸ்டாலின் விமர்சிக்கிறார். அவரது குணமும், எண்ணமும் தவறானது என்பதை மக்கள் புரிந்து விட்டனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதார வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள், வியாபாரிகள், நகைக் கடனாக கிராமுக்கு ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் சிறுகுறு வியாபாரிகள் பயனடையும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு ரேசன் கார்டை ஆவணமாக பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 350 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த காலத்தில் தொகையை செலுத்தினாலும் மீண்டும் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழகத்தை போல வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை.

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வந்தால் எதிர் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேளாண்மை துறை சார்பில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வெட்டுக்கிளிகளை அழிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News