செய்திகள்
தற்கொலை

கடலூர் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை

Published On 2020-05-28 14:58 IST   |   Update On 2020-05-28 14:58:00 IST
கடலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2 குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஜெயம்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி நித்யா (வயது 32). இவர்களுக்கு இன்பநாதன் (13) என்ற மகனும், இந்துமதி (10) என்ற மகளும் உள்ளனர்.

ரங்கநாதன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கடந்த சில வருடங்களாக நித்யா தனது 2 குழந்தைகளுடன் வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரங்கநாதன், மனைவி நித்யாவின் தம்பி பாலமணிகண்டனுக்கு போன் செய்து மனைவி பற்றி தவறாக பேசினார். இதனால் விரக்தி அடைந்த நித்யா தனது குழந்தைகளுக்கு குளிர் பானத்தில் வி‌ஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்தார். சிறிதுநேரத்தில் 3 பேரும் மயங்கி கிடந்தனர்.

அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தைகள் இன்பநாதன், இந்துமதி ஆகிய 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News