வேலூரில் முக்கிய வீதிகளில் கடைகள் திறக்க அனுமதி மறுப்பு- வியாபாரிகள் கலெக்டரிடம் மனு
வேலூர்:
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 34 வகையான கடைகள் இயங்க திங்கட்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரம், மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள அனுமதிக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம் வேலூரிலுள்ள மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் பழைய முறையே பின்பற்றப்படும் என்றும், லாங்கு பஜார், சாரதி மாளிகை, பர்மா பஜார் போன்ற பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவற்றில் பணிபுரிபவர்கள் நலன் கருதி இந்தப் பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதி அளித்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம நடத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தலைவர் ஞானவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாநகரின் வணிகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார், பர்மா பஜார், சாரதி மாளிகை ஆகியவை அமைந்துள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை மட்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
ஏற்கனவே மார்ச் 22-ந் தேதி முதல் இந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கடை வாடகை, குடும்ப பணியாளர்களுக்கு ஊதியம், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் வணிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே வணிகர்களின் நலன் கருதி மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார், பர்மா பஜார், சாரதி மாளிகை ஆகிய பகுதிகளிலும் நேரக்கட்டுப்பாட்டுடன் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
திறக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு ஆகியவை முறையாக பின்பற்றப்படும். இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.