குடியாத்தம் நகராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் இருந்த 46 பேருக்கு அபராதம்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நகராட்சி ஆணையாளர் எச். ரமேஷ் தலைமையில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பாக முழு சுகாதாரம், கிருமி நாசினி தெளித்தல், வாகனங்கள் மூலம் பிரசாரம், துண்டு பிரசுரம் ஆகியவற்றை வழங்கியும் முக கவசம் அணிவது குறித்து வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி உள்ளது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மே 11 ஆம் தேதி முதல் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் பொறுப்பு பாண்டி செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்தவர்கள், வாகனங்களில் சென்றவர்கள், பொதுமக்களிடம் தலா 100 ரூபாய் அபராதம் என 46 பேரிடம் ரூ.4,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து முக கவசம் அணிவது குறித்து வலியுறுத்தப்படும் முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச். ரமேஷ் தெரிவித்தார்.