செய்திகள்
வியாபாரிகளின் பழங்களை சாலையில் வீசிய சம்பவம்- வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்
வாணியம்பாடியில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையர், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி வியாபாரிகள் வைத்திருந்த பழங்களை சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி:
தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
அவ்வகையில், வாணியம்பாடியில் பெரும்பாலான கடைகள் செயல்படத் தொடங்கிய நிலையில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது பழக்கடைகளில் ஊரடங்கு விதியை பின்பற்றவில்லை எனக் கூறி பழங்களை சாலையில் கொட்டினார். தள்ளுவண்டி கடைக்கு சென்று, அங்கு தனி மனித இடைவெளியை பின்பற்றவில்லை எனக் கூறி வாழைப்பழங்களை எடுத்து தரையில் வீசினார். விற்பனைக்கு வைத்திருந்த பழங்களோடு தள்ளுவண்டியை கவிழ்த்தார்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவர் இவ்வாறு நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தத்தில் வெளியாகி, பலரும் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளித்ததுடன், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
‘பல முறை எடுத்துக் கூறியும் வியாபாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவக்கூடிய நிலை வாணியம்பாடி பகுதியிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இப்படி செய்துவிட்டேன். இது எனக்கே கஷ்டமாக இருந்தது. இதற்காக வருந்துகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.