செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தல்

Published On 2020-04-28 16:38 IST   |   Update On 2020-04-28 16:38:00 IST
ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பாலையூர்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோமல், பாலையூர், மாந்தை, இடைக்கியம், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி தலைமை தாங்கினார். கிராம தன்னார்வலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். எந்த ஒரு இடத்திலும் மத சம்பந்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளிநபர்கள் ஊருக்குள் வந்து தங்கி இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்காக ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் போலீசாரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும். கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். சாராயம் விற்பதற்கும், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும் அனுமதிக்கக் கூடாது. இதனை மீறினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், போலீசார், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News