செய்திகள்
வேலூர் மாவட்டம்

ஒடிசாவில் தவித்த கார் டிரைவர்கள் 330 பேர் வேலூர் வந்தனர்

Published On 2020-04-27 11:59 GMT   |   Update On 2020-04-27 11:59 GMT
வடமாநிலங்களுக்கு நோயாளிகளை ஏற்றி சென்று ஒடிசாவில் தவித்த கார் டிரைவர்கள் 330 பேர் வேலூர் வந்தடைந்தனர்.
வேலூர்:

வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு வந்த வடமாநிலத்தவர்கள் கடந்த 17-ந்தேதி முதல் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் மூலம் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை வேலூரைச் சேர்ந்த கார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அழைத்துச் சென்றனர்.

நோயாளிகளை இறக்கி விட்டு அங்கிருந்து வேலூர் டிரைவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். கடந்த 20-ந் தேதி மேற்கு வங்காளம் ஒடிசா மாநில எல்லையான பலாசூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே தமிழக கார்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக அங்கு டிரைவர்கள் தவித்தனர்.

இந்த நிலையில் தமிழக வாகனங்கள் திரும்பி வர அனுமதிக்க வேண்டுமென ஒடிசா மாநில முதல்-அமைச்சருக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கிருந்து டிரைவர்கள் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 130 பேர் வேலூர் வந்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

இன்று காலையில் வட மாநிலங்களுக்கு சென்ற மேலும் 200 கார் டிரைவர்கள் வேலூர் வந்தனர். அவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 47 டிரைவர்கள் ஒடிசாவில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் நாளை வேலூர் வந்து விடுவார்கள் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களுக்கு சென்று வந்த கார் டிரைவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News