செய்திகள்
தேங்கி கிடக்கும் உப்பு.

வேதாரண்யத்தில் ஒரு லட்சம் உப்பு மூட்டைகள் தேக்கம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

Published On 2020-04-26 10:08 GMT   |   Update On 2020-04-26 10:08 GMT
ஊரடங்கு உத்தரவால் வேதாரண்யத்தில் ஒரு லட்சம் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கி போய் இருக்கின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக் காவில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளது. இதனால் உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கி போய் இருக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருளான உப்பை உற்பத்தி செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று தற்போது சுமார் 800 உப்பளத் தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு உப்பள பகுதியில் உப்பு எடுத்து வருகின்றனர்.

தற்போது நாள்தோறும் சிறு வேன்களில் உப்பு ஏற்றுமதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடும் வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி கூடுதலான நிலையில் நாள் ஒன்றுக்கு 100 லாரிகளில் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும்.

ஆனால் அரசின் தடை உத்தரவால் தற்போது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் 10 லாரிகளில் மட்டுமே நாள்தோறும் உப்பு ஏற்றுமதியாகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் உப்பு முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

உப்பு ஏற்றுமதி இல்லாததால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசின் தடை உத்தரவு முடிந்து இயல்பு நிலை திரும்பி உப்பு ஏற்றுமதி எப்போது வரும் என உப்பளத் தொழிலாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Tags:    

Similar News