செய்திகள்
மாஞ்சா நூல்

மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2020-04-25 13:42 GMT   |   Update On 2020-04-25 13:42 GMT
மாஞ்சா நூல் பயன்படுத்தி விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:

காட்பாடி சேனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 36). வேலூர் ஜெயிலில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் ஊரீசு கல்லூரி அருகே வந்தபோது அறுந்து தொங்கிய பட்டம் விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் சுரேஷ்பாபு கழுத்தை அறுத்தது. படுகாயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காரணமாக சிலர் பொழுதுபோக்கிற்காக வீட்டின் மாடியில் நின்று பட்டம் விடுகிறார்கள். இதற்கு சாதாரண நூல்களைப் பயன்படுத்த வேண்டும். கண்ணாடி துகள்கள் அறைத்து மாஞ்சா போடப்பட்ட நூல் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

மாஞ்சா நூல் பயன்படுத்தினாலும் அதனால் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் குறித்து பொதுமக்கள் 0416-2258532, 2256966 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News