செய்திகள்
அச்சுத்தொழில்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அச்சுத்தொழில்- அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

Published On 2020-04-23 11:03 GMT   |   Update On 2020-04-23 11:03 GMT
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அச்சக தொழிலுக்கு உரிய கொரோனா நிவாரண நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புத்தூர், புதுப்பட்டினம், கொள்ளிடம் என சுமார் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இந்த அச்சகங்களில் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே அதாவது சித்திரை, வைகாசி மாதங்களில் தான் அதிகளவு திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் என அதிகளவு அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் அச்சு செய்திட ஆர்டர்கள் வரும்.

மற்ற நாட்களில் பில் புக்குகள், லெட்டர் பேடுகள் மற்றும் குறைந்த அளவிலான திருமணம் போன்ற அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறும். இந்நிலையில் நிகழாண்டு சீசன் தொடங்கும் இவ்வேலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அச்சகங்களும் மூடப்பட்டு அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து மே3-ந்தேதிக்கு மேல் அச்சகங்கள் திறக்கப்பட்டாலும் வரும் மாதங்களிலும் சுப நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நடத்துவதை தள்ளி வைக்கவே நினைப்பர். இதனால் இந்த ஆண்டு அச்சகங்களின் சீசன் முற்றிலும் பாதிக்கப்பட்டு அடுத்த சித்திரை, வைகாசி முகூர்த்த அழைப்பிதழ்கள் அடிக்கும் நாள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அச்சக தொழில் எந்திரங்கள், கணினிகள், இங்க் போன்ற அச்சு பொருட்கள் மூல தனங்களுக்கு அச்சக உரிமையாளர்கள் வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்று தான் தொழிலை நடத்தி வருகின்றனர்.

ஆகையால் அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அச்சக தொழிலுக்கு உரிய கொரோனா நிவாரண நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News