செய்திகள்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

1 லட்சத்துக்கு 15 ஆயிரம் வீடுகளுக்கு விலையில்லா உணவு பொருட்கள்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-04-22 17:28 IST   |   Update On 2020-04-22 17:28:00 IST
கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஒரு லட்சத்துக்கு 15 ஆயிரம் வீடுகளுக்கு விலையில்லா உணவு பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்:

கரூர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் எம்.ஆர்.வி. டிரஸ்ட் சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகளுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ துவரம் பருப்பு, அரை லிட்டர் எண்ணெய், அரை கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள்பொடி என்று 10 கிலோ எடையுள்ள பொருட்கள் வழங்கும் பணி கரூர் வெங்கமேட்டில் நடந்தது.

கலெக்டர் த.அன்பழகன், கீதாமணிவண்ணன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, வடக்கு நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகளை ஏற்றிய 15 வாகனங்களை கரூர் வடக்கு நகரத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளுக்கும் அமைச்சர் அனுப்பி வைத்தார்.

அதன்பின்னர் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாமணிவண்ணன் சார்பில் முதற்கட்டமாக 15 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா புலியூரில் நடந்தது. கீதா மணிவண்ணன் எம். எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு தலா 10 கிலோ எடையுள்ள உணவுபொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் வீடு, வீடாக சென்று அந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் பொரணி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, இந்த உணவு பொருட்கள் 5 இடங்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களாக 500 டன் அரிசி, 200 டன் கோதுமை மாவு, 100 டன் பருப்பு, 50 டன் சர்க்கரை மற்றும் ஆயில், 100 டன் உப்பு, 10 டன் மஞ்சள் தூள் ஆகியவை பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக கரூர் தொகுதியில் 1 லட்சம் வீடுகளுக்கும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 15 ஆயிரம் வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது. அடுத்த கட்டத்தில் மீதமுள்ளவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. எனது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளேன். கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 900 ரேபிட் கிட் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News