செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் இன்று மாலை தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தூத்துக்குடியைச்சேர்ந்த 73 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய மருத்துவக்குழுவின் பரிந்துரையை முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார்.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளனர். அவர்களால் மேலும் பரவ வாய்ப்பு இல்லை. கொரோனா பாதித்துள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். இன்று கண்டறியப்பட்டவர்களில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு பரவியுள்ளது.
கொரோனாவை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமலில் உள்ளது.
வறுமையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. வீடுகளில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 90 சதவீத அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்குக் உட்படுத்தியுள்ளோம். கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களை சோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றில் தமிழகம் 2 ஆம் நிலையில்தான் உள்ளது. ஈரோட்டில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மூலம் ஈரோட்டை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது எனதெரிவித்தார்.