செய்திகள்
கைது

கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published On 2020-04-04 13:03 IST   |   Update On 2020-04-04 13:03:00 IST
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும் அதனால் அந்த பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என எச்சரித்து வாட்ஸ்அப் மூலம் செய்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோப்புத்துறை ஜமாத் மன்ற தலைவர் ஷேக்அப்துல்லா வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வேதாரண்யம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய தேத்தாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 36) என்பவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விஜயகுமார் நாகை மாவட்டம் திருமருகல் பகுதி பெருநாட்டான் பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News