செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் தீவிர கண்காணிப்பு

Published On 2020-03-31 08:06 GMT   |   Update On 2020-03-31 08:06 GMT
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கொரோனா சம்பந்தமாக 27 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வேலூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே எங்கும் செல்லக்கூடாது.

வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் வைத்திருக்கக் கூடாது. அவருடைய வேலைகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 600 பேர் தொடர்ந்து வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு அறிகுறி ஏற்பட்டது.

அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதபோதகர்கள் 12 பேர் வேலூர் முள்ளி பாளையத்தில் தங்கியிருந்தனர். அவர்களை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களை ஆந்திரா போலீசார் அனுமதிக்காததால் மீண்டும் முள்ளிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.

இதேபோல டெல்லியில் இருந்து வந்த முஸ்லிம்கள் 14 பேர் ஆர்.என்.பாளையத்தில் தங்கியிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முஸ்லிம் மத போதகர்கள் 12 பேரும் டெல்லியில் இருந்து வந்த 14 பேரும் மற்றும் பேர்ணாம்பட்டு சேர்ந்த ஒருவர் என மொத்தம் 27 பேர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News