செய்திகள்
காய்கறி கடைகள் (கோப்புப்படம்)

தடை உத்தரவை மீறி அனுமதியின்றி இயங்கிய காய்கறி,மீன் கடைகள் அகற்றம்

Published On 2020-03-30 16:02 IST   |   Update On 2020-03-30 16:02:00 IST
மயிலாடுதுறையில் தடை உத்தரவை மீறி அனுமதியின்றி இயங்கிய காய்கறி, மீன் கடைகள் அகற்றப்பட்டதால் வியாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்டவை அனுமதி பெற்று திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளை பேருந்து நிலையத்தில் வைத்து விற்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனுமதி பெறாமல் கடை வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தலைமையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பழைய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது சமூக விலகல் கடைபிடித்து பொருட்களை வாங்க பொதுமக்களை அறிவுறுத்தினர். பின்னர் தரங்கம்பாடி சாலையில் அனுமதியின்றி இயங்கிய காய்கறி கடைகளை அப்புறப்படுத்த கோரி எச்சரிக்கை விடுத்து தராசுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த அழுகிய மீன்களை பறிமுதல் செய்ய முற்பட்டபோது வியாபாரிகள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மீன் விற்பனையை புதிய பஸ் நிலையத்தில் மாற்றக்கோரி உத்தரவிட்ட அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றா விட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள சமூக விதிகளை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Similar News