செய்திகள்
கண்காணிப்பு கேமரா

செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-03-09 23:28 IST   |   Update On 2020-03-09 23:28:00 IST
சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஊரப்பாக்கம் வரை கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்து மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதில் குறிப்பாக அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிகளான பரனூர் மேம்பாலம், மகேந்திரா வேல்டு சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் போன்ற பகுதிகளாகும். இவை அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளாகும். இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் போதிய போலீசாரும் பணியில் இருப்பது இல்லை. இதனால் போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

அப்படியே சிங்கப்பெருமாள் கோவில் ஜங்ஷனில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்தும் விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஊரப்பாக்கம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி உள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களும் வாகனத்தின் பதிவு எண்ணை கேட்டு ரசீது வழங்காமல் அன்றைய தேதியில் ரசீது வழங்கி தங்களது பணிச்சுமையை குறைத்து கொள்கின்றனர். இந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News