சீர்காழி அருகே சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்- கார் டிரைவர் கைது
சீர்காழி, மார்ச் 6-
நாகை மாவட்டம் சீர்காழியை அருகேயுள்ள திருநகரி பாலத்தில் இன்று அதிகாலை சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப் படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காருடன் பைக்கில் வந்த ஒருவர் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரைச் சோதனையிட்டதில் 6 மூட்டைகளில் 2350 சாராய பாக்கெட்டுகள் இருந்ததும், அவை காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து சாராய பாக்கெட்டுகள் மற்றும் பைக், காரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் போலீசார் கார் டிரைவரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா மயிலபத்து பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது31) என்பவரை கைது செய்தனர்.
மேலும் சாராயம் மற்றும் பைக்-கார் ஆகியவற்றையும் போலிசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.4.5 லட்சம் என கூறப்படுகிறது. தப்பி ஓடிய காரைக்கால் வடமட்டத்தை சேர்ந்த ராஜி என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.