பழமையான கோவில்களை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் - ஜிகே மணி
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததில் வைத்த 10 நிபந்தனைகளில் முதன்மையானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். அதனை தற்போது தமிழக அரசு அறிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகள் விடுப்பட்டுள்ளதை சேர்க்க வேண்டும். காவிரி பாசனவசதி பெறும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அரசு அறிவிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை இப்பகுதியில் அமைக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பழமையான திருகோயில்களை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற் கொண்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு அதனை கைவிட வேண்டும். கடந்த 2002ம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல்துறை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்தபோது அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 2005ம் ஆண்டு அதனை கைவிட்டது. அந்த நடைமுறையில் இருந்த 3 ஆண்டுகள் பராமரிப்பு இன்றியும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை மத்திய அரசு எடுக்க முயற்சிசெய்தபோது கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மத்திய அரசு கைவிட்டது. தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த பண்பாட்டை காக்கின்ற கோயில்களை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு பல நாட்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். தமிழக அரசு நெல்லுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தின் வறட்சியை போக்குவதற்கான நீர்மேலாண்மை திட்டங்களை கொண்டுவர வேண்டும். கோதாவரிகாவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடன் தொடங்குவதற்கான நிதியை நடப்பாண்டு ஒதுக்கீடு செய்ய பணியை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.