செய்திகள்
கொள்ளை

வேலூர் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

Published On 2020-02-28 11:26 GMT   |   Update On 2020-02-28 11:26 GMT
வேலூர் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 9 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அடுத்த பெரிய சேக்கனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 52). இவர் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் தூங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அரியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக், வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து தீனதயாளன், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News