செய்திகள்
திருமணம் நிறுத்தம்

குடியாத்தம் அருகே 10-ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-02-27 10:29 GMT   |   Update On 2020-02-27 10:29 GMT
குடியாத்தம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
வேலூர்:

குடியாத்தம் பகுதியில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் (1098) எண்ணிற்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சமூக நலத்துறை ஊழியர்கள் பிரியங்கா, ரம்யா, சைல்டுலைன் அணி உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் குடியாத்தம் போலீசார் ஆகியோர் இரவு 10 மணியளவில் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று அதிகாலை வாலிபரின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

பின்னர் அதிகாரிகள், சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News