செய்திகள்
செங்கல்பட்டு சுங்கச்சாவடி

சுங்கச்சாவடியில் ஒரு மாதமாக வாகனங்கள் இலவச பயணம் - சீரமைப்பு பணி தொடங்கியது

Published On 2020-02-24 09:13 GMT   |   Update On 2020-02-24 09:13 GMT
பரனூரில் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் ஒரு மாதமாக வாகனங்கள் இலவச பயணம் செய்த நிலையில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 25-ந் தேதி இரவு அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகளும், பஸ் டிரைவர், கண்டக்டருக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

இந்த மோதலில் சுங்கச்சாவடியில் இருந்த 12 பூத்துகளும் உடைத்து சூறையாடப்பட்டது. அங்கிருந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தன.

இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்கிருந்த ரூ18 லட்சம் மாயமானதாகவும் கூறப்பட்டது. பின்னர் அந்த பணம் மீட்கப்பட்டது.

தாக்குதல் நடந்த போது சுங்கச்சாவடி ஊழியர்கள் பணத்தை எடுத்து சென்றது அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுங்கச்சாவடி முழுவதும் சேதம் அடைந்ததால் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து இலவசமாக வாகனங்கள் சென்று வருகின்றன. இன்று 30-வது நாளாக வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.

சுங்கச் சாவடியை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்துகளாக சரி செய்து கேபிள்களை பதித்து வருகிறார்கள். சுங்கச்சாவடி முழுமையாக பயன்பாட்டிற்கு வர இன்று 20 நாட்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News