செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்கி வைத்தார் முதல்வர்

Published On 2020-02-19 10:25 GMT   |   Update On 2020-02-19 10:25 GMT
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சார்பில் 3 கட்டங்களாக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 4 மற்றும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்தது.

அகழ்வாராய்ச்சி பணியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் ஓடுகள், சுடுமண் உருவம், பானை ஓடுகள், தாயக்கட்டைகள், காதணி, உறைகிணறுகள், இரட்டைச் சுவர்கள், தண்ணீர் தொட்டிகள் உள்பட 15 ஆயிரம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் மூலம் கீழடி நாகரீகம் 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது. கீழடியில் 5 கட்டங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதற்காக கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கீழடி மற்றும் அதன் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 6-ம் கட்ட அகழாய்வு பணியை இன்று பிற்பகல் 3.45 மணியளவில் சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக கீழடியில் அகழாய்வு செய்யும் இடத்தில் கடந்த 2 நாட்களாக சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

கீழடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News