செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

மு.க.ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் முதல்வர் ஆக முடியாது- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-01-24 14:08 IST   |   Update On 2020-01-24 14:08:00 IST
மு.க.ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் முதல்வர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளையொட்டி திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே ஏழை-எளிய மக்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி பேசியதாவது:-

தன்மானத்தோடு தமிழ் நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர், பெரியார் கூறிய சமுதாய சீர்த்திருத்தங்கள், அண்ணா மேற்கொண்ட ஏழை-எளிய மக்களின் முன்னேற்றம் போன்றவற்றை நடைமுறை படுத்தினார்.

எம்.ஜி.ஆர். விட்டு சென்ற பணியை ஜெயலலிதா வேதனைகளையும் சோதனைகளையும், பல்வேறு கொடுமைகளையும் தகர்த்து கழகத்தில் 1½ கோடி தொண்டர்களை உருவாக்கினார்.


மு.க.ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ் நாட்டில் முதல்-அமைச்சராக முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றன.

ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிலர் முயற்சி மேற்கொண்ட சமயத்தில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து வரலாறு படைத்து அ.தி.மு.க.வை ஒரே இயக்கமாக கட்டி காத்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News