செய்திகள்
ரேசன் அரிசி

சர்க்கரை ரேஷன் அட்டைகள் மாற்றம் - கூடுதல் அரிசி வழங்க ரூ.605 கோடி ஒதுக்கீடு

Published On 2019-12-04 03:03 GMT   |   Update On 2019-12-04 03:03 GMT
சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ததால், கூடுதல் அரிசி வழங்க ரூ.605 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 279 ரேஷன் அட்டைகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகள் சர்க்கரையை பெறக்கூடிய அட்டைகளாக உள்ளன.



இந்த அட்டைதாரர்களும் அரிசியை பெறக்கூடிய அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த மாதம் நவம்பர் 19-ந் தேதி அறிவித்தார். இதனையடுத்து சுமார் 4½ லட்சம் சர்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டன. எனவே கூடுதல் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளது.

இந்த நிலையில் தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுவினியோக திட்டத்தில் தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 ரேஷன் அட்டைகள், சர்க்கரை ரேஷன் அட்டைகளாக உள்ளன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய ரேஷன் அட்டைகளை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்யும்போது பயனாளிகளுக்கு வழங்க ஏதுவாக மாதம் ஒன்றுக்கு 20,389.820 டன் அரிசியை கூடுதலாக வழங்கவும், அதற்காக மாதம் ஒன்றுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ரூ.50.41 கோடியை (ஆண்டொன்றுக்கு ரூ.605 கோடி) ஒதுக்கீடு செய்தும், அரசாணை வழங்க வேண்டும் என்று அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கடிதம் எழுதினார்.

இதை அரசு ஏற்றுக்கொண்டு, அரிசியை கூடுதலாக பெற்று வழங்குவதற்கான கூடுதல் மானியச்செலவை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News