செய்திகள்
செல்போன் பறிப்பு

வேலூர் கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

Published On 2019-10-29 11:08 GMT   |   Update On 2019-10-29 11:08 GMT
வேலூர் கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூரின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கோட்டை உள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோட்டையை பார்வையிட வருகின்றனர். உள்ளூர் மக்கள் தினமும் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால், சமூக விரோத கும்பல்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. கோட்டை உட்புற வளாகத்தில் நிறுத்தப்படும் பைக் மற்றும் பொதுமக்களின் நகை மற்றும் செல்போன், பொருட்களும் அவ்வப்போது சமூக விரோத கும்பல்களின் கைவரிசையால் திருடப்பட்டு வருகிறது.

தொரப்பாடியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோட்டைக்கு வந்தார். கோட்டை அகழியை சுற்றிப்பார்க்க செல்போன் பேசியபடி அங்குள்ள படிக்கட்டு வழியாக நடந்து சென்றார்.

இதைப்பார்த்த 3 பேர் கொண்ட சமூக விரோத கும்பல், அந்த பெண்ணிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஸ்மார்ட் போனின் விலை ரூ.18 ஆயிரம் என்று தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றங்களை தடுக்க கோட்டைக்குள் போலீசாரால் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருப்பினும், கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிக்கும் சம்பவம் கோட்டையை சுற்றி உள்ள மதிற் சுவர்களில் இடைப்பட்ட பகுதிகளில் கஞ்சா வியாபாரிகள் நடமாட்டம், காதலர்கள் என்ற பெயரில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்கள் என தினமும் தொடர்கதையாகி விட்டது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News