செய்திகள்
ஆழ்துளை கிணறு

பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுங்கள்- மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு

Published On 2019-10-26 04:34 GMT   |   Update On 2019-10-26 04:34 GMT
திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தொடரும் நிலையில், பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்து சென்றபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளை கிணற்றில் மேல்மட்டம் வரை மண்ணை கொட்டி மூடியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக தெரிகிறது.

குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் குழந்தையை மீட்கும் பல்வேறு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது. 



எனினும், 70 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்கும் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. 16 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நீடிக்கிறது. சுர்ஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளின் அபாயத்தை உணர்ந்து அவற்றை உடனடியாக மூடும்படி வேலூர், கடலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதுபோன்ற அபாயகரமான ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக பலர் தங்கள் வேதனையையும், ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவருகின்றனர். 
Tags:    

Similar News