செய்திகள்
அரக்கோணத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

அரக்கோணத்தில் சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2019-10-25 12:02 GMT   |   Update On 2019-10-25 12:02 GMT
அரக்கோணத்தில் சாலை வசதி கேட்டு மறியல் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம்:

அரக்கோணம் வீட்டு வசதி வாரிய சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் சிமெண்ட் சாலை அமைக்காததால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் தற்போது பெய்த மழையால் சாலை மேலும் சேதமடைந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அரக்கோணம் நகராட்சி அலுவலகம் அருகே திருத்தணி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் 2 பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி மனோகரன், டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம். தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் நகராட்சி அலுவலர்கள் நேரில் வந்து உறுதிமொழி அளித்தால் மட்டுமே மறியலை கைவிட முடியும் என கூறினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களின் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மறியல் காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News