செய்திகள்
கைது

வேலூர் அரியூரில் வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2019-10-23 11:14 GMT   |   Update On 2019-10-23 11:24 GMT
வேலூர் அரியூரில் வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் அடுத்த அரியூரில் தேசிய வங்கி இயங்கி வருகிறது. கடந்த 5-ந்தேதி மாலை ஊழியர்கள் வழக்கம்போல் வங்கியை பூட்டிச்சென்றனர். விடுமுறை காரணமாக 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வங்கி அடைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி காலை ஊழியர்கள் வங்கியை திறந்தனர். அப்போது வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் பணம், நகை வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைக்கப்படவில்லை.

இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கி மேலாளர் ராஜேந்திரன் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மற்றொரு தேசிய வங்கியின் பூட்டை உடைத்து கடந்த 17-ந் தேதி நள்ளிரவு மர்மகும்பல் கொள்ளை அடிக்க முயன்றது. அந்த சமயத்தில் ரோந்து போலீசார் வந்ததையடுத்து மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த 2 பேர் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது.

இந்த நிலையில் வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அரியூர் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளை முயற்சி நடந்த நேரத்தில் வங்கியின் அருகே உள்ள வீட்டின் முன்பாக பைக் ஒன்று நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பைக்கின் உரிமையாளரான அரியூர் ஜீவா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21) பிடித்து விசாரித்தனர்.

அவர் அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் கிருஷ்ணா (25) அவருடன் சேர்ந்து பணத்துக்கு ஆசைப்பட்டு முகமூடி அணிந்து 2 வங்கிகளிலும் கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News