செய்திகள்
பொன். ராதாகிருஷ்ணன்

ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரசுக்கு எதிர்காலம் கிடையாது- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-10-23 05:14 GMT   |   Update On 2019-10-23 05:14 GMT
ரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்காவிடினும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலமே கிடையாது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு விழாவையொட்டி சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை வேலூர் காங்கேயநல்லூரில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

தமிழக மக்கள் அனைவரும் இந்த தீபாவளியை கதராடை அணிந்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து தங்களது வீடுகளில் விருந்து படைத்துக் கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடும் போது இறைவனே தங்களது வீடுகளுக்கு வந்து உணவு அருந்தியதற்கு சமமாகக் கருதுகிறேன்.

முரசொலி அறக்கட்டளை கட்டடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்பது குறித்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உடனடியாக வைகோ திமுக தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒப்படைக்க வேண்டியது தி.மு.க.வின் கடமையாகும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ரஜினிகாந்த், பா.ஜ.க.வில் இணைந்திட வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கூறி வருகிறேன். அவ்வாறு நடக்காமல் ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும் நன்றாகவே அமையும். அதேசமயம், ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் இணைந்தாலோ தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


ரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்காவிடினும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலமே கிடையாது. எனவே, கே.எஸ்.அழகிரியின் கருத்து பயனற்றது என்றே கருதுகிறேன்.

ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக் தமிழகத்தின் பஞ்சம் போக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். அதன்படி, முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சொந்தமானதாகும். ஏற்கனவே நூறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்னும் 899 ஆண்டுகளுக்கு அந்த அணை மீது தமிழகத்துக்கு உரிமை உள்ளது.

இந்த அணைக்கு கேரளம் ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News