செய்திகள்
நட்சத்திரா

டெங்கு காய்ச்சலால் பலி - மாணவி படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2019-10-17 10:40 GMT   |   Update On 2019-10-17 10:49 GMT
வேலூரில் டெங்கு காய்ச்சலால் மாணவி பலியான சம்பவம் குறித்து அவர் படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தை சேர்ந்த சரண்மோகன்ராஜ் என்பவரது மகள் நட்சத்திரா (வயது4). வெட்டுவானத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

கடந்த 11-ந்தேதி நட்சத்திரா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் நட்சத்திராவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் நட்சத்திராவின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர்.

அதில் நட்சத்திரா டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

வேலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம், பி.டி.ஓ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவ காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமி வசித்த வீடு மற்றும் தெருக்களில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தூய்மையாக இருந்தது.

இதையடுத்து அந்த மாணவி படித்த தனியார் மெட்ரிக் பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகத்தை அழைத்து அதை அகற்றினர்.

மேலும் பள்ளியில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். டெங்கு கொசுக்கள் இருந்ததால் அந்த பள்ளி ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இனி இது போன்று கண்டறியப்பட்டால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News