செய்திகள்
கோப்பு படம்

ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி - ஆற்றுக்கு அழைத்து சென்ற ஜவுளிகடை ஊழியர் கைது

Published On 2019-10-14 11:51 GMT   |   Update On 2019-10-14 11:51 GMT
பவானி ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி பலியானதையடுத்து ஜவுளிகடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள அத்தாணி பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு பள்ளி மாணவிகளின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை செய்ததில் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் காந்திநகர்- புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகள் ஓவியா (வயது-14) மற்றும் ஜி.எஸ்.காலனி கழுதைப்பாளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவர் மகள் சுகந்தி (16) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்தியூரைச் சேர்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனடம் இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென மனு அளித்திருந்தார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தியூர் தாசில்தார் மாணவிகளின் பெற்றோர்களுடன் பழனிச்சாமி இதுதொடர்பாக மேலும் ஒரு மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் எஸ்பி சக்தி கணேசன் உத்தரவின்பேரில் பவானி டிஎஸ்பி சேகர், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க துவங்கினர்.

விசாரணையில் அந்தியூரில் உள்ள ஒரு துணிக்கடையில் சுகந்தியும் ஓவியாவும் விடுமுறை நாட்களில் வேலைக்கு வந்து சென்றது தெரியவந்தது.

அங்கு துணி எடுக்க வந்த செங்கல் சூளையில் வேலை செய்து வந்த நந்தகுமார் (வயது-25, திருமணமானவர்), சுகந்தியிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னதாகவும், அதில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் சுகந்தியையும் ஓவியாவையும் பைக்கில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அத்தாணி சவண்டப்பூர் பாலத்தின் அடியில் ஓடும் பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக கூட்டிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், அங்கு அவர்களுடன் செல்போனில் போட்டோ எடுத்து விட்டு நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.

பிறகு மூவரும் குளிக்க சென்று நந்தகுமார் மட்டுமே ஆற்றின் கரை பகுதிக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பின்பு நந்தகுமார் சென்று ஆற்றில் பார்க்கும்போது ஓவியா, சுகந்தி காணாமல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை நந்தகுமார் கடந்த 8 மாதங்களாக பயந்துபோய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள் ளதாக தெரிகிறது.

இவரது செல்போன் காணாமல் போனதால் இந்த போட்டோ தகவல் யாரிடமாவது சிக்கி தான் மாட்டிக்கொண்டு விடுவோமோ? என பயந்துபோன நந்தகுமார் ஒரிச்சேரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளியங்கிரியிடம் சரண் அடைந்துள்ளார்.

துணி கடையில் வேலை செய்து வந்த போது யாருடன் சுகந்தி பேசுவார் என போலீசார் விசாரித்ததில் நந்தகுமார் பவானி ஆற்றுக்கு தான் கூட்டிச்சென்றதை ஒப்புக்கொண்டார் என்பதாக போலீஸார் தரப்பில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆப்பக்கூடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நந்தகுமார் மீது இளம்பெண் கடத்தல், தகவல்களை மறைத்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News