செய்திகள்
கைது

அம்பேத்கார் சிலையை உடைத்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

Published On 2019-08-27 10:35 GMT   |   Update On 2019-08-27 10:35 GMT
வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் போலீஸ் நிலையம் எதிரே நின்ற ஒரு ஜீப்பை கலவரக்கும்பல் தீ வைத்து கொளுத்தியது.

மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலையையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அரசு ஆஸ்பத்திரியில் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் ராமச்சந்திரன், சரத்குமார், பாபுராஜன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து வேதாரண்யம் பகுதியில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் போலீசார், மற்றும் அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டனர்.

நேற்று காலை சேதப்படுத்தப்பட்ட அம் பேத்கார் சிலையை அப்புறப்படுத்தப்பட்டு புதிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சுற்றிலும் தற்போது இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கலவரம் காரணமாக நேற்று முன்தினம் இரவும், நேற்று 2-வது நாளாகவும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் போலீசாரின் தீவிர ரோந்து பணியால் வேதாரண்யத்தில் நேற்று மாலை முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன.

இன்று காலை வேதாரண்யம் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு சென்று வந்தனர். வேதாரண்யம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கும், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் கலவரம் தொடர்பாக வேதாரண்யம் போலீசார் 28 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே அம்பேத்கார் சிலையை சேதப்படுத்திய முக்கிய குற்றவாளிகளான வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி ரோட்டை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 33), கடிநெல்வயல் நடுக்காட்டை சேர்ந்த லக்கட் என்கிற வெனின் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் வேதாரண்யத்தில் இயல்புநிலை திரும்பினாலும் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி.க்கள் உள்பட 750 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News