செய்திகள்
பக்தர்கள் உயிரிழப்பு

அத்திவரதர் தரிசனம் - மாரடைப்பால் 2 பக்தர்கள் உயிரிழப்பு

Published On 2019-08-07 08:28 GMT   |   Update On 2019-08-07 08:28 GMT
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் இறந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வரிசையிலும் தரிசன முறையிலும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த மேலும் 2 பேர் இறந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த முதியவர் லட்சுமணன் (70) இன்று காலை அத்திவரதரை தரிசிக்க குடும்பத்துடன் பக்தர்களோடு நடந்து வந்தார். வாகன மண்டபம் அருகே வந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

நீலகிரியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது65). இவர் குடும்பத்துடன் அத்தி வரதரை வழிபட நேற்று காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வந்தார். அவர்கள் ஒலிமுகமது பேட்டையில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு பஸ்சில் வந்து இறங்கினார். அப்போது ரத்தினத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். மாரடைப்பால் ரத்தினம் இறந்திருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News