செய்திகள்
அத்திவரதர்

அத்திவரதரை தரிசிக்க 2 நாட்கள் ஆகலாம் - கலெக்டர்

Published On 2019-08-07 06:21 GMT   |   Update On 2019-08-07 06:21 GMT
அத்திவரதரை தரிசிக்க 2 நாட்கள் வரையில் தங்கி இருக்கும் வகையில் தயாராக வரவேண்டும் என்றும் பக்தர்களுக்கு கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.

சயன கோலத்தில் 31 நாட்கள் காட்சி தந்த அத்தி வரதரை தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் ஒவ்வொரு நாளும் கூட்டம் அலைமோதியது. 31 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த 1-ந்தேதியில் இருந்து நின்ற கோலத்தில் அத்திவரதர், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அத்திவரதர் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

கடந்த 6 நாட்களாகவே கட்டுக்கடங்காத கூட்டத்தால் காஞ்சிபுரம் நகரமே திணறியது. செவ்வாய்க் கிழமையான நேற்று அத்தி வரதரை 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனத்தின் 38-வது நாளான இன்றும் காஞ்சிபுரத்தில் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மஞ்சள் மற்றும் மெஜந்தா வண்ண பட்டுடையில் காட்சி தந்த அத்திவரதரை தரிசனம் செய்ய அதிகாலையிலேயே லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களை அணி அணியாக பிரித்து போலீசார் கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர். இருப்பினும் கோவிலுக்குள்ளேயும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள் கோவிந்தா கோ‌ஷம் முழங்க அத்திவரதரை பயபக்தியுடன் தரிசித்தனர்.

இன்று காலையில் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டதால் 10 மணி நேரம் வரை காத்திருந்த பின்னரே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் வரையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இளைஞர்கள், இளம் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் இல்லாமல் அத்திவரதரை காண மக்கள் குவிந்து இருந்தனர். இன்று 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


அத்திவரதர் தரிசனத்துக்கு வருகிற 17-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடைகிறது.

இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த முறை அத்தி வரதர் தரிசன வாய்ப்பை தவறவிட்டால் அடுத்து 40 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும் என்பதால் கடைசி கட்டத்தில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடிக்கிறார்கள். இதன் காரணமாகவே கூட்டம் அலை மோதியது.

வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை)யில் இருந்து அத்தி வரதர் தரிசனத்தின் கடைசி நாளான 17-ந்தேதிக்குள் தொடர் விடுமுறையும் வருகிறது. வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் அன்று அரசு விடுமுறையாகும்.

முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை. இதனால் வருகிற சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களும் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிறகு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விடுமுறை. மறுநாள் (16-ந் தேதி) காஞ்சீபுரத்துக்கு உள்ளூர் விடுமுறை. 17-ந் தேதி அத்திவரதர் தரிசனத்துக்கு கடைசி நாள். இதனால் இந்த 3 நாட்களும் காஞ்சிபுரத்தை நோக்கி மக்கள் கட்டுக் கடங்காத வகையில் படையெடுப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வி.ஐ.பி. தரிசனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பாஸ் இல்லாத யாரையும், போலீசார் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தனியாக அழைத்துச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தரிசனத்துக்காக வரும் வாகனங்கள் நீண்ட தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள வாலாஜாபாத், கீழம்பி பைபாஸ் 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் தூசி, பொன்னேரி கரை ஆகிய இடங்கள் வரை மட்டுமே வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இங்கு இறங்கி வேறு வாகனங்களில்தான் செல்ல வேண்டும்.

இந்த வாகனங்களும், காஞ்சிபுரம் பெரியார் நகர், ரங்கசாமி குளம் ஆகிய 2 இடங்கள் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இங்கிருந்து அத்திவரதரை தரிசிக்க சுமார் 3 கி.மீ. தூரம் சாதாரண பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வி.ஐ.பி. கார் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே தங்களது வாகனத்தில் கோவில் வரை செல்ல முடிகிறது.

நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் முதியவர்கள் கடும் சிரமப்பட்டனர். ரங்கசாமி குளம் முதல் திருக்கோவில் வரை முதியவர்கள் செல்ல இலவச ஆட்டோக்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட வில்லை. முக்கிய பிரமுகர்கள், பாஸ் வைத்திருப்பவர்கள் பல்வேறு தெருக்கள் மூலம் கார்களில் சென்று எளிதாக கோவில் அருகில் சென்று விடும் நிலையில் சாதாரண பக்தர்களே அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மேல் மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அத்திவரதர் தரிசனத்துக்காக இதுநாள் வரையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று முதல் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று அளித்த பேட்டியில் இரவு 11 மணி வரையில் இருக்கும் தரிசனம். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரையிலும் நீட்டிக்கப்படும் என்றார்.

இனி வரும் நாட்களில் தரிசனத்துக்கு வருபவர்கள் 2 நாட்கள் வரையில் தங்கி இருக்கும் வகையில் தயாராக வரவேண்டும் என்றும் பக்தர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்திவரதர் தரிசனத்துக்கு குறுகிய நாட்களே இருப்பதால் அடுத்த 10 நாட்களும் பக்தர்கள் அலை அலையாய் காஞ்சிபுரம் நோக்கி திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டுள்ளது.

Tags:    

Similar News