செய்திகள்
மனு அளிக்க வந்த பொதுமக்கள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

Published On 2019-08-06 16:22 GMT   |   Update On 2019-08-06 16:22 GMT
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 604 மனுக்களை பெற்றார். பின்னர் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கல்லக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், கருப்பிலாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி, வண்ணாரப்பேட்டை, கீழஎசனை, கீழவண்ணன், ஏழேரி, இடையத்தான்குடி, வைப்பம், செம்மந்தங்குடி, சத்யா நகர், பாளையம், அருங்கால், அர்ச்சனாபுரம், கருவேலங்காடு, பாப்பான்குளம், சின்னப்பட்டாக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக செல்ல வேண்டும் எனில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்ல பஸ் வசதிகள் கிடையாது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேற்கண்ட அனைத்து கிராமங்களுக்கும் மையமாக உள்ள கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் கல்லக்குடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News