மயிலாடுதுறை அருகே காரை ஏற்றி தொழிலாளி படுகொலை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள உக்கடை மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி ஷீலா (40).இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ந் தேதி மர்மமான முறையில் மணல்மேடு அருகே நாரணமங்கலம் பகுதியில் தலை நசுங்கியநிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே அவர் ஓட்டிச்சென்ற மொபட்டும் கிடந்தது. மேலும் அங்குள்ள புளிய மரத்தில் ஒரு கார் மோதிய நிலையில் கிடந்தது.
இதுபற்றி மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மணல்மேடு போலீசார் சித்தமல்லி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பட்டவர்த்தியை சேர்ந்த ராஜேஷ்(32), சேத்தூரை சேர்ந்த சிவசிதம்பரம் (23) ஆகியோரை விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும்,ராஜ கோபாலை காரை ஏற்றி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதில் ராஜகோபால் அவரது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டப்பட்டது தெரியவந்தது.
ராஜகோபாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த அமீர்ஹைதர்கானுக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அமீர் ஹைதர்கான் மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அமீர் ஹைதர்கானுக்கும், ராஜ கோபாலின் மனைவி ஷீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதல் விவகாரம், அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் மன முடைந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் அமீர் ஹைதர்கானின் மகனும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி- மகன் இறந்த பிறகும் அவர் திருத்தவில்லை. தொடர்ந்து ஷீலாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார்.
மேலும் ஷீலாவுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அமீர் ஹைதர்கான், தனது சில சொத்துக்களுக்கு ராஜ கோபாலை பினாமியாக நியமித்து இருந்தார்.
இதற்கிடையே மனைவி ஷீலாவின் கள்ளக்காதல் விவகாரம் ராஜகோபாலுக்கு தெரியவந்தது. பலமுறை நேரில் பார்த்த அவர் மிகவும் மனமுடைந்தார். இதனால் அவர் அமீர் ஹைதர்கான் மற்றும் மனைவி ஷீலாவையும் கண்டித்தார்.
இதையடுத்து அமீர் ஹைதர்கான், ராஜகோ பாலை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் கூலிப்படையை ஏவி காரை ஏற்றி ராஜகோபாலை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலையை ஒரு விபத்து போல் அரங்கேற்றி நாடகமாடியதும் தெரியவந்தது.
தற்போது கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், சிவ சிதம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் அமீர் ஹைதர்கான் மற்றும் ஷீலா உள்பட 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.