செய்திகள்
ஜெல்லி மீன்

கோடியக்கரையில் வலையில் சிக்கும் ஜெல்லி மீன்களால் மீனவர்கள் பாதிப்பு

Published On 2019-07-24 16:29 IST   |   Update On 2019-07-24 16:29:00 IST
கோடியக்கரையில் மீனவர் வலையில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் சிக்குவதால் வலைகளில் முறுக்கு ஏற்பட்டு மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரைதிரும்புகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அதிக அளவில் வி‌ஷத்தன்மையுள்ள ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. கடற்பரப்பில் அதிக அளவில் ஜல்லி மீன்கள் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலமாகும். இந்த மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பார்கள். சீசன் முடிந்த பிறகு உள்ளூர் மீனவர்கள் மட்டும் சிறிய பைபர் படகில் மீன் பிடிக்க செல்வார்கள்.

தற்போது மீனவர் வலையில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் சிக்குகின்றன. இதனால் வலைகளில் முறுக்கு ஏற்பட்டு மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரைதிரும்புகின்றனர்.

இது குறித்து கோடியக்கரை முன்னாள் மீனவர் நலச்சங்க சித்ரவேலு கூறும்போது, கோடியக்கரையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் வலையில் தற்போது அதிக அளவில் ஜெல்லி மீன்கள் சிக்குகின்றன.

இந்த வகையான ஜெல்லி மீன்களை சொரிமீன் என்றும் அழைப்பார்கள். இதில் சொரி, செஞ்சொரி, நெருப்புசொரி, பணங்காசொரி என நான்கு வகை உண்டு. தண்ணீர் நிறத்தில் காணப்படும் இந்த சொரிமீன்கள் உடலில் பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

மற்ற சொரிமீன்கள் உடம்பில் பட்டால் அரிப்பு ஏற்படும். கோடியக்கரையில் காணப்படுவது பனங்காய் சொரி வகை மீன்கள் ஆகும். இந்த மீன் லேசான அரிப்பு தன்மை உடையது. இந்த மீன்களை இங்கிருந்து பிடித்து பாடம் செய்து சீன நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர் என்றார்.

Similar News