செய்திகள்
கைது

போலீஸ் போல் நடித்து லாரி டிரைவர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது

Published On 2019-07-23 15:16 IST   |   Update On 2019-07-23 15:16:00 IST
அரியலூர் கல்லூர் பாலம் அருகே போலீஸ் போல் நடித்து லாரி டிரைவர்களிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:

அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளியிடங்களில் இருந்து கொண்டு வருவதற்கும், தொழிற்சாலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை வெளியிடங்களுக்கு ஏற்றி செல்வதற்கும் அதிக அளவில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரியலூர் பகுதியில் எப்போதும் லாரிகள் சென்ற வண்ணம் இருக்கும்.

இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர், போலீஸ் போல் நடித்து லாரி டிரைவர்களிடம் ஆவணங்களை கேட்டு, பணம் மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக போலீசாருக்கும் ஏராளமான புகார்கள் வந்தன.

இந்தநிலையில் அரியலூர் கல்லூர் பாலம் அருகே மர்மநபர்கள் 3பேர் தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு அந்த வழியாக வந்த லாரி டிரைவர்களிடம் ஆவணங்களை கேட்டும், அதனை கொடுக்காத டிரைவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். போலீஸ்காரர்கள் என்று நம்பிய டிரைவரிடம் இருந்து ரூ.500 மற்றும் செல்போனை பறித்து கொண்டனர்.

இதையறிந்த கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்ற 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் கீழக்குளத்தூரை சேர்ந்த கலைவாணன், விஜய், பாலமுருகன் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் அரியலூரில் முக்கிய இடங்களில் நின்று , லாரி டிரைவர்களிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதுவரை அவர்கள் எத்தனை பேரிடம் பணத்தை பறித்துள்ளனர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News