ஆலங்குடி அருகே கோவில் கட்டுவதில் தகராறு- விவசாயி தற்கொலை
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீழகாயம் பட்டியைச் சேர்ந்தவர் வேலு (வயது 55) விவசாயி. இவர் கடந்த 4ந்தேதி வீட்டில் விஷமருந்து குடித்து விட்டு மயக்க நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேலுவின் மகன் சுரேஷ் என்பவர் சம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் எனது தந்தை மனஉளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
எனவே தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். உடனே போலீசார் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், மேலகாயம்பட்டியில் புதிதாக கருப்பர்கோவில் கட்டுவதில் பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் கீழகாயம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சக்திவேல் (40) ஆகிய 2 பேர் வேலுவிடம் தகராறுசெய்து வந்ததும் தெரியவந்தது.
இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பட்டி விடுதி போலீஸ் இன்ஸ் பெக்டர் அலாவூதீன் வழக்குபதிவு சுப்பிரமணியன் மற்றும் சக்திவேலை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.