செய்திகள்
பயணிகள் போராட்டம் நடத்திய காட்சி.

புதுக்கோட்டையில் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

Published On 2019-07-04 20:11 IST   |   Update On 2019-07-04 20:11:00 IST
புதுக்கோட்டையில் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
புதுக்கோட்டை:

மானாமதுரையில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயில் புதுக்கோட்டை வழியாக செல்கிறது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு வந்து, பின்னர் மீண்டும் 3 நிமிடத்தில் திருச்சிக்கு செல்வது வழக்கம். இந்த ரெயிலில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலர் பயணம் செய்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக இந்த ரெயில் வழக்கமான நேரத்தைவிட சுமார் 15 நிமிடம் முன்னதாக வந்து சென்று விடுகிறது. இதனால் பயணிகள் ரெயிலை பிடிக்க முடியாமல் தவற விட்டு விடுகின்றனர். இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை.

இதுகுறித்து பயணிகள் பலமுறை ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் ரெயில் சரியான நேரத்திற்கு வந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் நேற்றும் இதே போல் வழக்கத்தைவிட முன்னதாகவே ரெயில் வந்தது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து மீண்டும் அதே ரெயிலில் ஏரி சென்றனர். இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News