செய்திகள்
தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்து கணவர்-மனைவி, தாய் பலி
சென்னை தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம், திருமங்கை மன்னன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வந்தவர் பிரசன்னா (வயது 38). தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அர்ச்சனா (32). இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்களுடன் பிரசன்னாவின் தாய் ரேவதியும் (59) தங்கி இருந்தார்.
நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் தனி அறையில் தூங்கினர். தாய் ரேவதி முன்பக்க அறையில் படுத்து இருந்தார்.இன்று காலை நீண்ட நேரம் வரை அவர்களது வீட்டுக் கதவு திறக்கவில்லை. காலை 10 மணி அளவில் அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் முடிச்சூரை சேர்ந்த துர்க்கா வந்தார்.
சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து சென்ற போது வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது. முன்பக்க அறையில் பிரசன்னாவும், அவரது தாய் ரேவதியும் இறந்து கிடந்தனர். படுக்கை அறையின் கீழே அர்ச்சனா இறந்து கிடந்தார்.
வீட்டின் முன்பக்க அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து இருந்தது. அருகில் இருந்த ஒரு `கபோர்டு' பகுதி மட்டும் தீயில் எரிந்து காணப்பட்டது.
பலியான ரேவதி, பிரசன்னாவின் முகத்தில் மட்டும் லேசான தீக்காயம் காணப்பட்டது. அர்ச்சனாவின் உடலில் தீக்காயம் இல்லை.
பிரிட்ஜ் வெடித்த போது ஏற்பட்ட கரும்புகை வீடு முழுவதும் பரவி இருக்கிறது. ஏ.சி. இயங்கியதால் ஜன்னல் கதவுகளை மூடி வைத்து உள்ளனர். இதனால் புகை வெளியே செல்ல வழி இல்லாமல் வீடு முழுவதும் சூழ்ந்து உள்ளது. இதில் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் பிரசன்னா உள்பட 3 பேரும் பலியாகி விட்டனர். அறையை விட்டு வெளியேற முயன்ற போது பிரசன்னாவுக்கும், அவரது தாய் ரேவதிக்கும் தீக்காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
சேலையூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இன்று காலை கதவு உடைக்கப்பட்ட போது ஏராளமான புகை பிரசன்னாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தது.
பலியான அர்ச்சனாவின் சொந்த ஊர் பெங்களூர் ஆகும். அவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவர்கள் இதற்கு முன்பு திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறினார்கள்.
பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.