கத்திப்பாரா மேம்பாலம் அருகே கேட்பாரற்று நின்ற சரக்கு வேனில் கடத்திய 100 கிலோ கஞ்சா சிக்கியது
ஆலந்தூர்:
கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள தியேட்டர் அருகே கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று சரக்கு வேன் ஒன்று நின்றது.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சரக்கு வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
வேனில் சோதனை செய்த போது அதன் மேல் பகுதியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
அதில் சிறிய பாக்கெட்டுகளாக கஞ்சா இருந்தது. மொத்தம் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேனில் கஞ்சா கடத்தி வந்தவர் யார்? எதற்காக வண்டியை இங்கே நிறுத்தி சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வேனின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
போலீசாரின் சோதனைக்கு பயந்து கஞ்சாவுடன் வேனை அங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.