செய்திகள்

அரக்கோணம் அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்டு

Published On 2019-06-25 10:30 GMT   |   Update On 2019-06-25 10:30 GMT
அரக்கோணம் அருகே நிலத்தை வரன்முறைப்படுத்தி அறிக்கை அளிக்க லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
அரக்கோணம்:

சென்னை அய்யம்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 29). இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் அரக்கோணம் அருகே மோசூர் கிராமத்தில் உள்ளது.

நிலத்தை மனைகளாக பிரித்து வரன்முறைப்படுத்தி சான்றிதழ் பெற அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா(57) என்பவரிடம் கேட்டுள்ளார்.

நிலத்தை வரன்முறைப்படுத்தி அறிக்கை அளிக்க ரூ.56 ஆயிரத்து 600 லஞ்சமாக தரவேண்டும் என்று ஜீவா கேட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முத்துராஜ் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் முத்துராஜிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.56 ஆயிரத்து 600-ஐ போலீசார் கொடுத்து அனுப்பினர்.

பின்னர் முத்துராஜ், ஜீவாவிடம் பணம் தயாராக உள்ளது. எங்கு வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

அரக்கோணம் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகில் ஜீவாவிடம் முத்துராஜ் பணத்தை கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி, மற்றொரு விஜயலட்சுமி மற்றும் போலீசார் கையும் களவுமாக ஜீவாவை பிடித்து கைது செய்தனர்.

அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜீவா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News