செய்திகள்

ஆம்பூர் அருகே நடந்த பொதுகூட்டத்தில் திமுக - அதிமுகவினர் மோதல்

Published On 2019-06-24 06:56 GMT   |   Update On 2019-06-24 06:56 GMT
ஆம்பூர் அருகே அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கூட்ரோட்டில் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள், ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தல் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று இரவு நடந்தது.

இதில் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன், காத்தவராயன் ஆகியோர் பேசினர். அப்போது அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேசினர். இரவு 10 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் 10 மணி கடந்தும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வெங்கட சமுத்திரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சிதம்பரம் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அங்கு வந்தனர். இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்த கூடாது உடனே நிறுத்த வேண்டும். என அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் பொதுக்கூட்டத்தை நிறுத்துமாறு கூறினர்.

அப்போது போலீசாருக்கும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க.வினருடன் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானபடுத்தினர்.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் உமராபாத் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

அதே நேரத்தில் வெங்கடசமுத்திரம் கூட்ரோட்டில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். இதனால் இரவு 12 மணிவரை பதட்டம் நீடித்தது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

2 கட்சிகள் சார்பில் தனி தனியே புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News