செய்திகள்
கோப்புப்படம்

சென்னை மின்சார ரெயில்கள் 23-ந்தேதி ரத்து

Published On 2019-06-21 12:00 IST   |   Update On 2019-06-21 12:00:00 IST
கூடுவாஞ்சேரி- வண்டலூர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வருகிற 23-ந்தேதி அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கூடுவாஞ்சேரிக்கும் வண்டலூருக்கும் இடையில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக சுரங்கபாதை அமைக்கும் பணி ரெயில்வே நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் செங்கல்பட்டு ரெயில்வே சந்திப்பில் இருந்து அதிகாலை 3.55 மணியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் ரெயில்களும் ரெயில்வே நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அன்று பிற்பகல் 2.25 மணி முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என செங்கல்பட்டு ரெயில்வே நிலைய மேலாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

23-ந் தேதி (ஞாயிறு) அன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரெயில்கள் அனைத்தும் வழக்கம் போல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.



இதேபோல் செங்கல்பட்டு வழியாக அன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் புதுச்சேரி ரெயில் (எண். 16116), 8.30 மணிக்கு செல்லும் அந்தோதியா விரைவு ரெயில் (16192), 10 மணிக்கு செல்லும் திருச்செந்தூர் விரைவு ரெயில் (16106), 11 மணிக்கு செல்லும் பல்லவன் விரைவு ரெயில் (12606), 1.20 மணிக்கு செல்லும் வைகை விரைவு ரெயில் (12636) ஆகிய ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெவ்வேறு பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

23-ந் தேதி (ஞாயிறு) காலை சென்னை எழும்பூரில் இருந்து 6.40 மணிக்கு புதுச்சேரிக்கு இயக்கப்படும் புதுச்சேரி விரைவு பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News