செய்திகள்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்பக்கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

Published On 2019-06-18 15:46 GMT   |   Update On 2019-06-18 15:46 GMT
அஸ்தினாபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்பக்கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வி.கைகாட்டி:

அரியலூரில் அரசு சிமெண்டு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்காக அஸ்தினாபுரம், காட்டுபிரிங்கியம், வெளிப்பிரிங்கியம், நெறிஞ்சிகோரை ஆகிய கிராமங்களில் இருந்து கடந்த 1996-ம் ஆண்டு 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலையில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு பல ஆண்டு களாகியும் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது தற்போது நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக உள்ளன. இதனால் நிலம் கொடுத்த விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது குறைந்த அளவு இழப்பீடு தொகையே வழங்கப்பட்டது. எனவே அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி தரவேண்டும். துண்டிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கான மின் மோட்டார்களின் மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என கூறி அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News