செய்திகள்

பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு

Published On 2019-05-30 03:22 GMT   |   Update On 2019-05-30 03:22 GMT
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். இவரது வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது.
சென்னை:

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. பயிர் பெருக்கம் என்ற பாட தொகுப்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை பற்றிய தொகுப்புக்கு கீழே நெல் ஜெயராமனை பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதில், ‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதிரங்கம் கிராமத்தை சேர்ந்தவர். நம்மாழ்வாரின் சீடராவார். இவர் நமது நெல்லை பாதுகாப்போம் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அயராது பாடுபட்டவர். விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறித்துக்கொண்டு அவற்றிற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உரையாற்றுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசு இவரை அழைத்தது. 2011-ம் ஆண்டு இவர் சிறந்த இயற்கை விவசாயத்துக்கான மாநில விருதையும், 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றார்’ என்பது உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Tags:    

Similar News