செய்திகள்

அமமுகவின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2019-05-29 04:54 GMT   |   Update On 2019-05-29 04:54 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் 1-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம்.



எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது. என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்களை அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று கேட்டதற்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

அரசியல் பாதை என்பது நிதானமாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உடைக்க நீங்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு அது உண்மையல்ல. எனது அரசியல் பாதை தெளிவாக உள்ளது. அதன்படி செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News