செய்திகள்

‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று பேச்சு - ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்

Published On 2019-05-17 11:00 IST   |   Update On 2019-05-17 11:00:00 IST
‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திருவொற்றியூர்:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலை கண்டிக்கும் வகையில் அளித்த பேட்டியில் அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து கமல் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனில் நேற்று புகார் அளித்தனர். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 13-ந் தேதி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இச்செயல் ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய அமைச்சரே சட்டத்தை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால் இந்திய தண்டனை சட்டம் 503, 504-ன்படி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News