செய்திகள்
வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கல்லூரி மாணவி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published On 2019-05-15 07:40 GMT   |   Update On 2019-05-15 07:40 GMT
கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:

கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி கடந்த 8-ந்தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, செல்வம், அன்புச்செழியன், அம்பேத் வளவன், ரவிசங்கர், ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கடந்த மே 8-ந்தேதி காட்டுமிராண்டி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


படுகொலை செய்யப்பட்ட திலகவதியின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும். கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாதி வெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாண்டுதுறை கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொல்லி மலை சாதிய வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வாயில் மனித கழிவுகளை திணித்து கேவலமாக அநாகரீகமாக நடத்தி உள்ளார்கள். இது போன்ற சாதி வெறி கும்பல் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடருமானால் விடுதலை சிறுத்தைகள் பொறுத்துக் கொள்ளாது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Tags:    

Similar News